பொங்கல் பண்டிகைக்கு மண்பானை, அடுப்புகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும்


பொங்கல் பண்டிகைக்கு மண்பானை, அடுப்புகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும்
x

பொங்கல் பண்டிகைக்கு மண்பானை, அடுப்புகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

பொங்கல் பண்டிகைக்கு மண்பானை, அடுப்புகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

சுட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து 369 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்திய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது கலெக்டர் பேசுகையில், ''பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். தீர்வு காண முடியாத மனு எனில் மனுதாரரருக்கு தகுந்த விளக்கம் கொடுத்து, அதனை முடிக்க வேண்டும். மனுக்களை நீங்களே கையில் வைத்து இருக்கக் கூடாது. மேலும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு உயர் அலுவலர்கள் கட்டாயம் வரவேண்டும். வெளியில் செல்ல வேண்டும் என்றால் முன்அனுமதி பெற்று இருக்க வேண்டும். முன்அனுமதி பெறாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

பணிநியமன ஆணை

அதைத்தொடர்ந்து கருணை அடிப்படையில் ஒருவருக்கு கிராம நிர்வாக அலுவலராகவும், 2 பேருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர்களாகவும், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் என்ற திட்டத்தில் 3 பேருக்கும் என 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் நவீன மடக்கு சக்கர நாற்காலி மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 ஆயிரம் மானியத்தில் கடன் உதவி பெறுவதற்கான பரிந்துரை கடிதங்களையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன்ராஜசேகர், ஹரிஹரன், தனித்துனை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மண்பானை, அடுப்பு

கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பானை மற்றும் அடுப்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், ''பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த ஆண்டு முதல் புத்தாண்டில் விளைகிற புதுஅரிசியை புதுப்பானையில் பொங்கலிட களிமண்ணால் ஆன் புதுப்பானையும், புது அடுப்பும் அரசு கொள்முதல் செய்து இலவசமாக கொடுக்க வேண்டும். இதனால் மண்பானை தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும்'' என கூறப்பட்டிருந்தது.

மேலும் அவர்கள் கலெக்டருக்கு அடுப்பும், பானையும் வழங்கினர்.

தர்ணா போராட்டம்

புதூர்நாடு பகுதியை சேர்ந்த குமார் என்பவரை சிலர் தாக்கியதில் படுகாயம் அடைந்து திருப்பத்தூர் அரது ஆஸ்பத்திரியில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story