மின்கட்டண அட்டையுடன் ஆதார்இணைப்பை அரசு கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
மின்கட்டண அட்டையுடன் ஆதார்இணைப்பை அரசு கைவிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் மின்கட்டண அட்டையுடன் ஆதார் எண் இணைப்பை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும், தூத்துக்குடியில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 150 கிலோ மீட்டர் தூர நடைபயணம் நடந்தது. இந்த நடைபயணம் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நிறைவடைந்தது. தொடர்ந்து தூத்துக்குடி அண்ணாநகரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகர் செயலாளர் தா.ராஜா வரவேற்று பேசினார். மாநில செயற்க்குழு உறுப்பினர் நூர்முகம்மது, மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன், ஆர்.ரசல் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், பேச்சிமுத்து, அப்பாதுரை, சன்முகராஜ், சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ் நன்றி கூறினார்.
ஆதார் எண் இணைப்பு
முன்னதாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்கட்டண அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி தமிழக அரசு பொதுமக்களை வற்புறுத்துவதன் காரணமாக பொதுமக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனை அரசு கைவிட வேண்டும். மத்திய பா.ஜனதா அரசு, பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, அவ்வாறு செய்ய முடியாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னர் மூலம் போட்டி அரசை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கவர்னர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய விதமாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.