நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதோடு பயணிகளை ஒருமையில் திட்டியதால் அரசு டவுன் பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்
நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதோடு பயணிகளை ஒருமையில் திட்டியதால் அரசு டவுன் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நிறுத்தத்தில் நிற்கவில்லை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இருந்து ஆரகலூர் கிராமத்திற்கு நாள்தோறும் 3 முறை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சின்னசேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ் சின்னசேலம் பழைய பஸ் நிலையத்தில் வரும்போது அங்குள்ள கடைகளில் பணியாற்றி வரும் பெண்கள் பலரும் இரவு நேரத்தில் பணி முடிந்து அந்த பஸ்சில் பயணம் செய்து சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் அந்த அரசு டவுன் பஸ், சின்னசேலம் பழைய பஸ் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இதனால் அங்குள்ள நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள், பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.
ஒருமையில் திட்டினர்
பின்னர் சிறிது தூரம் சென்று பஸ்சை நிறுத்தி டிரைவரான சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ், கண்டக்டரான விழுப்புரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் கீழே இறங்கினர்.
உடனே அவர்கள் இருவரிடமும், ஏன் பஸ்சை நிறுத்தாமல் சென்றீர்கள் என்று கேட்டு பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் அந்த பயணிகளை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பணியிடை நீக்கம்
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி அந்த பஸ்சின் டிரைவர் கோவிந்தராஜ், கண்டக்டர் ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.