அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் காத்திருப்பு போராட்டம்


அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் காத்திருப்பு போராட்டம்
x

முறைகேடாக வசூல் செய்த பணத்தை திருப்பி தரக்கோரி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

முறைகேடாக வசூல்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரலாற்று துறை பிரிவின் பேராசிரியர் ஒருவர் கல்லூரி பருவ கட்டணம் என்று கூறி 73 மாணவிகளிடமிருந்து தலா ரூ.1,783 வசூல் செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் மற்றும் அந்த துறை தலைவரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்ச்சைக்கு உள்ளான துறை தலைவர் கடந்த 4 தினங்களுக்கு முன்பாக குறிப்பிட்ட பேராசிரியர் தான் மாணவிகளிடமிருந்து முறைகேடாக பணம் வசூல் செய்திருந்ததாகவும், அதில் தன் பெயர் தவறுதலாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து கல்லூரியில் வரலாற்று துறையில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் முறைகேடாக பணம் வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முறைகேடு தொடர்பாக விசாரணை செய்வதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த 2 குழுக்களின் அறிக்கையை தமிழக உயர்கல்வித்துறை இயக்குனர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் உறுதி அளித்தார். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story