இளையராஜா, சிவராமன் உள்பட 2,314 பேருக்கு பட்டம்; காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி வழங்கினார்


இளையராஜா, சிவராமன் உள்பட 2,314 பேருக்கு பட்டம்; காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி வழங்கினார்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இளையராஜா, சிவராமன் உள்பட 2,314 பேருக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்கினார்.

திண்டுக்கல்

காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இளையராஜா, சிவராமன் உள்பட 2,314 பேருக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்கினார்

பிரதமர் மோடி வருகை

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நேற்று, பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நேற்று தனி விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அம்பாத்துரை வந்தார்.

அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பிரத்யேக கார் மூலம் விழா நடைபெற்ற பல்கலைக்கழகத்துக்கு மோடி வந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் திரண்டு நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்து வந்தார். விழா நடைபெற்ற பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கின் நுழைவுவாயில் பகுதியில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பட்டமளிப்பு விழா

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பல்நோக்கு அரங்குக்கு வந்தனர். அப்போது மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்றபடி பிரதமர் உள்பட அனைவரையும் வரவேற்றனர். உடனே பிரதமர் மோடி அரங்கில் இருந்தவர்களை பார்த்து கையசைத்தார்.

இதையடுத்து மாணவ-மாணவிகள் தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றை பாட பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் குர்மித்சிங் வரவேற்றார்.

2,314 பேருக்கு பட்டம்

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளை பயின்ற 2,314 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பேசினார்.

பின்னர் விழா நிறைவுபெற்றதும் பிரதமர் மோடி அரங்கில் மற்றொரு வாசல் வழியாக சென்று அரங்குக்கு வெளியே அமர்ந்து இருந்தவர்களை சந்தித்தார். அங்கு பிரதமரை பார்த்ததும் அனைவரும் உற்சாகத்தில் கரவொலி எழுப்பினர். உடனே பதிலுக்கு பிரதமர் மோடியும் மகிழ்ச்சியில் கையசைத்தார்.

அதன்பின்னர் மீண்டும் அரங்குக்கு உள்ளே வந்த பிரதமர் மோடி கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடி அரங்கை விட்டு வெளியே வந்தார். அவருடன் முதல்-அமைச்சர் உள்பட அனைவரும் வெளியே வந்தனர். பின்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பெரியகருப்பன், கீதாஜீவன், மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், காந்தி, சரசுவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமர், முதல்-அமைச்சர் ஆகியோர் பங்கேற்றதால் பட்டமளிப்பு விழா முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக மாறியது. இதனால் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடி பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. போலீஸ் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பல்கலைக்கழகம் முன்பு அமைந்துள்ள திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விழாவில் பங்கேற்க வந்தவர்களின் கார்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. மேலும் விழாவுக்கு வந்த மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் 5 கட்ட சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.


Next Story