திருமணமான 4 மாதத்தில் பட்டதாரி வாலிபர் விபத்தில் பலி
பண்ருட்டியில் திருமணமான 4 மாதத்தில் பட்டதாரி வாலிபா் விபத்தில் பலியானார்.
பண்ருட்டி,
திருமணம்
பண்ருட்டி எல்.என்.புரத்தில் வசித்து வருபவர் மோகன்(வயது 55). இவர் பண்ருட்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(45). இந்த தம்பதிக்கு ராஜ்குமார்(32), ராஜ்கமல்(30) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சாப்ட்வேர் என்ஜினீயரான ராஜ்குமாருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். பி.எஸ்சி. படித்திருந்த ராஜ்கமலும் பெங்களூருவில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ராஜ்கமலுக்கும், வேப்பூரை சேர்ந்த என்ஜினீயர் குணசுந்தரிக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
தாயை அழைத்து வர...
இந்த நிலையில் விஜயலட்சுமியும், குணசுந்தரியும் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜ்கமல் முதலில் தனது மனைவி குணசுந்தரியை வீட்டிற்கு அழைத்து சென்றார்.
பின்னர் தனது தாய் விஜயலட்சுமியை அழைத்து வருவதற்காக ராஜ்கமல் மீண்டும் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சென்னை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே விஜயலட்சுமி நடந்து வந்து கொண்டிருந்தார்.
புதுமாப்பிள்ளை பலி
உடனே ராஜ்கமல், மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது சவ ஊர்வலத்தின் போது ரோட்டில் வீசப்பட்டு மழையில் நனைந்து கிடந்த மலர்மாலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் நிலைதடுமாறி விழுந்த ராஜ்கமலின் தலை, பாலத்தின் சுவரில் மோதியது. இந்த விபத்தில் மண்டை உடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இந்த விபத்து தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.