வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? பட்டதாரி இளைஞர்கள் கருத்து
வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பது பற்றி பட்டதாரி இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச நிதி அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.
பெருகிவரும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இந்த யோசனையை அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
பிரதமர் மோடி அதிரடி
'மத்திய அரசு பணிகளில் 18 மாதங்களில் 10 லட்சம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள்' என்று அப்போது பிரதமர் மோடி அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி ரெயில்வே துறையில் 2 லட்சத்து 93 ஆயிரம், பாதுகாப்புத்துறையில் 2 லட்சத்து 63 ஆயிரம், உள்துறையில் 1 லட்சத்து 43 ஆயிரம், தபால்துறையில் 90 ஆயிரம், வருவாய்த்துறையில் 80 ஆயிரம், கணக்கு தணிக்கைத் துறையில் 26 ஆயிரம், சுரங்கத்துறையில் 7 ஆயிரம், அணுசக்தி துறையில் 9 ஆயிரத்து 400, நீர்வளத்துறையில் 3 ஆயிரத்து 800 என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., ரெயில்வே தேர்வு வாரியம் போன்றவைகள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-ந் தேதி அன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் முகாமையும் அவர் தொடங்கிவைத்தார்.
மு.க.ஸ்டாலினின் பெருமிதம்
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறது.
பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன.
தமிழக போலீஸ்துறையில் 3 ஆயிரத்து 552 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.
படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் பணியை தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு மட்டும் 419 முகாம்கள் நடத்தப்பட்டு 68 ஆயிரத்து 14 பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது' என்று பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறதா? வேலை வாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பவை பற்றி பட்டதாரிகளும், வேலைதேடும் இளைஞர்களும் வெளிப்படுத்திய கருத்துகளைப் பார்ப்போம்.
ஒப்பந்த பணியாளர்கள்
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக்:-
மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று ஏராளமான வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மத்திய அரசில் 24 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகிறது. இதை போல் தமிழக அரசு வருவாய்துறை, ஊரக வளர்ச்சிதுறை, காவல் துறை உள்ளிட்ட பல துறைகளில் வேலை வாய்ப்பு வழங்குகிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போது ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகிற பணியாளர்கள் அரசு பணியாளர்களாக இல்லாமல் ஒப்பந்த பணியாளர்களாக பணியில் சேர்க்கப்படுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. அரசு பணியாளர்களாகவே பணி நியமனம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைத்து அரசின் சலுகைகளும் கிடைக்க வேண்டும். வேலை வாய்ப்பு துறையின் மூலம் நடத்தப்படுகின்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு குறிப்பிட்ட சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
பணப்பலன்கள்
நெல்லை டவுனை சேர்ந்த அஜிசா:-
மத்திய அரசு வேலைவாய்ப்பு விழா நடத்தி பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு 71 ஆயிரம் வேலைவாய்ப்பு ஆணையை வழங்கி உள்ளது. ஆனாலும் நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இன்னும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
மாநில அரசு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் அரசு வேலைகள் தற்போது குறைந்து வருகிறது. எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு உரிய பணப்பலன்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு பணிக்காக எழுத்து தேர்வுக்கு பயிற்சி அளித்து மாதிரி தேர்வு நடத்துவது பணிக்கு செல்வோருக்கு ஊக்கம் கொடுக்கிறது.
ேவலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்
சுத்தமல்லியை சேர்ந்த கார்த்திகேயன்:-
மத்திய அரசு பல மாநிலங்களில் வேலை வாய்ப்பு விழாவை நடத்தி வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 71 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணையை வழங்கி உள்ளது. இதன்மூலம் ஏழை- எளிய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது. மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி அதன்மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். இது ராணுவ கனவில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இதேபோல் தமிழக அரசு முன்பு, காவல்துறையில் இளைஞர் காவல் படை தொடங்கப்பட்டு அதில் 2 ஆண்டு பணியாற்றியவர்கள் இரண்டாம் நிலை காவலர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்து அதன்படி பணியமர்த்தப்பட்டார்கள். இந்த நிலை மீண்டும் வரவேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சியை அதிகரிக்க வேண்டும். ஏராளமான பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் அதிக அளவில் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்.
தனியாருக்கு சலுகைகள்
தென்காசி அருகே உள்ள வல்லத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி:-
நான் பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பினை வழங்க திட்டங்களை வகுத்து வருகிறது. ஆனால் முறையாக அது இளைஞர்களுக்கு வந்து சேரவில்லை. குறிப்பாக பொதுத்துறைகளை தனியாருக்கு அரசுகள் தாரை வார்த்து வருகின்றன. இதனால் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. தனியாருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகிறது. வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த பொன்சேகர்:-
நான் எம்.ஏ. பட்டதாரி. எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று யாரும் அறிவிப்பதில்லை. தமிழக அரசு மூலம் தனியார் வேலைவாய்ப்பு என இணையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நமது பெயரை பதிவு செய்யத்தான் முடியும். ஆனால் வேலை எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை. எல்லா மாவட்டங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதில் சிறிய கம்பெனிகள் மட்டும்தான் ஆள் எடுக்கிறார்கள். அந்த கம்பெனிகளில் சம்பளமும் குறைவாக தான் கிடைக்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வயது வரம்பை குறைத்தால் இன்னும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.