தொழிற்பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா
கூடலூரில் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கூடலூர்,
கூடலூர் அரசினர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் 2020-2022-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜார்ஜ் தலைமை தாங்கி பேசும்போது, நடப்பாண்டில் தேர்வு எழுதிய அனைத்து பயிற்சியாளர்களும் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். பயிற்சி முடித்தவர்களுக்கு கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே படித்த பலர் அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் தங்கள் வாழ்க்கை திறனை மேம்படுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். தொழிற்பயிற்சி நிலைய தலைவர் முகமது, பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மின்வாரியத்தில் பணிபுரியும் பயிற்சி மைய முன்னாள் மாணவர்கள் ராதாகிருஷ்ணன், இளநிலை பொறியாளர், ஹரிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பயிற்றுநர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் ஆசிரியை அம்மினி நன்றி கூறினார்.