பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம்
நெல்லை மாவட்டத்தில் பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
குடியரசு தினத்தையொட்டி சிவந்திபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஜெகன் முன்னிலை வகித்தார். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவது, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவது, ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு பணிகளை செய்வது, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 873 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வது, அனைவருக்கும் வீட்டு குடிநீர் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட கவுன்சிலர் அருண் தபசுபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி தங்கராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகராசி, விக்கிரமசிங்கபுரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஆக்னஸ்சாந்தி, வேளாண்மை துறை உதவி அலுவலர் சாந்தி, நெல்லை சமூகசேவை சங்கத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கீதா, ஆரோக்கிய ஜெரோன், அம்பை வட்டார கல்வி அலுவலர் ஜெயந்த், ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ராமர், பாலசுப்பிரமணியம், சுப்புலட்சுமி, பேபி நிஷா, சகாய சந்தோஷ், சுமிதா, சுசீலா, முத்துலட்சுமி, முருகேஸ்வரி, மாரியம்மாள், இஸ்ரவேல், ஊராட்சி செயலர் வேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி யூனியன் அரியகுளம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பற்றாளர் உஷா, ஊராட்சி செயலர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பஞ்சாயத்து தலைவர் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி சேவை மைய கட்டிடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சிந்தாமணி பஞ்சாயத்து தலைவர் எம்.ஜேசுமிக்கேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தேவராஜன், பற்றாளர் இர்ஷாத் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் தேசிய கொடியேற்றினார்.
நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் பாண்டிச்சேரி கிராமத்தில் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜி, பற்றாளர், யூனியன் துணை வட்டார அலுவலர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பரப்பாடியில் உள்ள துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி தர தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் முருகன் நன்றி கூறினார்.
திசையன்விளை அருகே நவ்வலடி பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் அதன் தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது. பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொழுநோய் தடுப்பு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பஞ்சாயத்தில் பண்ணை குட்டை அமைத்தல், வேளாண் கருவிகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.