ஓபிஎஸ் தலைமையில் ஏப்.24-ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு - பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
ஓபிஎஸ் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பொதுக்குழுவை தலைமை நியமிக்கிறது. தலைமையை பொதுக்குழு தேர்வு செய்கிறது. ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழுதொண்டர்களுக்கு சம்பந்தமில்லாத போலியானது. ஓபிஎஸ் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன.
அரசியல் மாயையில் அதிமுக சிக்கியுள்ளது. அதிமுக பிளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கில் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றோம். அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோதெல்லாம் மக்கள் தான் நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும். சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் பிரியக்கூடாது என்பதால் ஓபிஎஸ்ஸும் டிடிவி தினகரனும் வேட்பாளர்களை வாபஸ் பெற்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் வடமாநிலத்தை சேர்ந்த பாஜகவினரும், அருந்ததியினரும் வாக்களிக்கவில்லை என்றால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும்.
எட்டு தோல்விகளை சந்தித்தது தான் சூப்பர் எம்.ஜி.ஆர்(ஈபிஎஸ்) செய்த சாதனை. ஈரோடு இடைத்தேர்தல் முடிவுக்கு எங்களுக்கு ஊக்கத்தை தருகிறது.
ஓபிஎஸ் தரப்பில் வருகிற 24-ம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் ஓபிஎஸ் என்றார்.