கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை சீரமைக்க மானியம்


கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை சீரமைக்க மானியம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை சீரமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை சீரமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவாரண திட்டம்

2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நவீன மயமாக்குதலுக்காகவும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், கூடுதல் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் நிறுவி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு உதவி புரியும் வகையில் தமிழக அரசு கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி முதல் திட்டத்தில் கொரோனா தொற்று காலத்தின் போது பாதிக்கப்பட்ட தனிநபர், உரிமையாளர் மற்றும் பங்குதாரர் நிறுவனங்கள், தாங்களாகவோ அல்லது தங்களது வாரிசுகள் அல்லது பங்குதாரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட தங்கள் தொழில் நிறுவனங்களை மறுசீரமைக்கவும் அல்லது அதே தொழிலை புதிதாக ஆரம்பிக்கவும் அல்லது வேறு தொழில் தொடங்கவும் ரூ.5 கோடி வரையிலான திட்டங்களுக்கு எந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மானியமாக தமிழக அரசினால் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் நிறுவனங்கள் பயன்பெற தகுதியுடையவை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 21 முதல் 55 வயதுக்குள் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவோர்களுக்கு தொழிற்பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மானியம்

அதேபோன்று 2-வது திட்டத்தில்பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் தங்களது தொழிலை மேம்படுத்தவும், புதிய யுக்திகளை புகுத்தி நவீனப்படுத்தவும், கூடுதலாக வாங்கும் எந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25 சதவீதம் மானியமாக, அதிகபட்சம் ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற 23.3.2020 தேதிக்கு பின்னால் பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மாநிலத்தில் எந்தப்பகுதியில் தொழில் நிறுவனம் அமைந்திருந்தாலும் மானியம் பெற தகுதியுடையதாகும். எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தகுதியுடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்று பயனடைய திருப்பத்தூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story