மயான சூறை திருவிழா
மயான சூறை திருவிழா நடந்தது.
மயான சூறை
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் சுவேத நதிக்கரையில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி மாத அமாவாசையான நேற்று மயான சூறை திருவிழா நடைபெற்றது. மயான சூறையை முன்னிட்டு நேற்று காலை பெரம்பலூர்-துறையூர் சாலையில் பாளையம் தோப்பு பகுதி அருகே உள்ள மயானத்தில் அம்மன் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பின்னர் மயானத்தில் தங்களது வேண்டுதல் நிறைவேற முழங்காலிட்டு மடியேந்தி காத்திருந்த பெண் பக்தர்களை காளி வேடமணிந்தவர்கள் முறத்தாலும், உலக்கையாலும் அடித்து மந்திரித்ததோடு, பேய் ஓட்டினர். அதனை தொடர்ந்து கோவிலில் இருந்து மதியம் உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்திற்கு மயானத்திற்கு வந்தார். மதியம் 2 மணிக்கு மயானத்தில் பூஜை செய்து, மயான சூறை நடைபெற்றது.
சாதத்தை அள்ளி வீசினர்
அப்போது மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் உருவத்திற்கு கீழ் அரிசி சாதம் கொட்டப்பட்டிருந்தது. அந்த சாதத்தில் கிடா வெட்டி, அதன் ரத்தமிட்டு அந்த சாதத்தை அள்ளி இரைத்தனர். அந்த ரத்தம் கலந்த சாதத்தை மருளாளிகள் அள்ளி வீசினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பெண் பக்தர்கள் மடியேந்தி பெற்றுக்கொண்டனர். இத்திருவிழாவில் பங்கேற்று, சாதத்தை வாங்கினால், குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பேறு கிடைக்கும் மற்றும் இளம்பெண்களுக்கு திருமணத் தடை உள்ளிட்டவை நீங்கும் என்ற ஐதீகத்தால், இதில் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சுவாமி ஊர்வலம்
அப்போது அருள் வந்து சாமி ஆடியவர்களிடம் பக்தர்கள் ஆடு, கோழிகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். அவர்கள் அதன் ரத்தத்தை உறிஞ்சி குடித்தனர். அதனை தொடர்ந்து சுவாமி ஊர்வலமும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு வீரபத்திரர் சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது.
நாளை (புதன்கிழமை) மதியம் 4 மணிக்கு கோவிலில் மாவிளக்கு, பொங்கலிடுதல் நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அம்மன், சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.