அங்காளம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை திருவிழா


அங்காளம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை திருவிழா
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் 2 அங்காளம்மன் கோவில்களில் நடைபெற்ற மயானக்கொள்ளை விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

பாளையப்பட்டு, உள்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் பாளையப்பட்டு, உள்பேட்டை ஆகிய 2 இடங்களில் அங்காளம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் மயானக் கொள்ளை திருவிழா கடந்த 13-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை நேற்று நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணிக்கு பாளையப்பட்டு அங்காளம்மன் கோவிலிலும், தொடர்ந்து 5.30 மணிக்கு உள்பேட்டை அங்காளம்மன் கோவிலிலும் மயானக்கொள்ளை நடைபெற்றது. இரண்டு கோவில்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் ஆக்ரோஷத்துடன் எழுந்தருளி வல்லாள ராஜனின் கோட்டையை இடித்து தள்ளி மயானத்தை நோக்கி புறப்பட்டு சென்றார்.

முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சி

தொடர்ந்து மயானத்தில் முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த சுவாரசியமான நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பூசாரிகளிடம் முறத்தால் அடி வாங்கினார்கள். இவ்வாறு அடி வாங்கினால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் மறைந்து நல்ல குணங்கள் உருவாகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

இதே போல் சில பக்தர்கள் காளி, பாவாடைராயன் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் வேடம் அணிந்து மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்கள் தரும் ரத்த சாதத்தை பிரசாதமாக சாப்பிடுபவர்களுக்கு உடனடியாக திருமணம் ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.

போலீஸ் பாதுகாப்பு

விழாவில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 2 அங்காளம்மனையும் வழிபட்டனர். இந்த கோவிலில் இரு தரப்பினர் இடையே சாமி தூக்குவது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Next Story