அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா


தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயான கொள்ளை திருவிழா

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், உடலில் எலுமிச்சை பழங்களை குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.

மேலும் பக்தர்கள் காளி வேடம் அணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பூசாரியிடம் பக்தர்கள் சாட்டையடி வாங்கி கொண்டனர். மதியம், அலங்கரிக்கப்பட்ட தேரில் பூத வாகனத்தில் அமர்ந்து அங்காளபரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு இடுகாட்டில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளை காளி வேடம் அணிந்து சென்ற பக்தர்கள் வாயால் கடித்தனர்.

விழாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விழாவில், பல இடங்களில் பொதுமக்கள் அன்னதானம், நீர்மோர், தண்ணீர் போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியையொட்டி அங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு பூஜை, நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர் மயான கொள்ளை தேர்த்திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஏராளமான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அம்மன் வேடமிட்டு மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பலர் அழகு குத்தியும், அந்திரத்தில் தொங்கியபடியும் ஊர்வலமாக சென்றனர். விழாவையொட்டி அம்மனுக்கு அந்தரத்தில் தொங்கியவாறு சென்று பக்தர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தரத்தில் தொங்கி தீபாராதனை

காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகே அம்மன் ஊர்வலம் வந்தபோது 10 அடி தூரத்திற்கு அந்திரத்தில் ராட்டினத்தில் அலகு குத்தி தொங்கியவாறு பக்தர்கள் வந்து அம்மனுக்கு மாலை அணிவித்து, தீபாராதனை காட்டினர். மேலும் கை குழந்தையை ஏந்தி சென்று மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. மயானத்திற்க்கு சென்ற அம்மன் ஊர்வலத்தின் போது பூசாரிகள் சாட்டையால் பக்தர்களை அடித்து பேய் விட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதேபோன்று பர்கூர், ராயக்கோட்டை, ஓசூர், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, கல்லாவி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story