பச்சிளம் பெண் குழந்தை வீச்சு


பச்சிளம் பெண் குழந்தை வீச்சு
x

கடலூரில், சாலையோர முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்ச தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் சூரப்பநாயக்கன்சாவடியில் தனியார் பல்பொருள் அங்காடி சுற்றுச்சுவர் அருகே சாலையோரம் உள்ள முட்புதரில் நேற்று இரவு 8 மணி அளவில் குழந்தை அழும் சத்தம் நீண்ட நேரமாக கேட்டது. இதை அந்த பல்பொருள் அங்காடிக்கு வந்த ஒருவர் பார்த்து, அங்குள்ள ஊழியர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து, அந்த குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையை ஒரு பையில் வைத்து, சிறிய துணியால் மூடி வைத்திருந்தது. பிறந்து 2 வாரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை என்று தெரிந்தது. இதையடுத்து அந்த குழந்தையை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

விசாரணை

இதற்கிடையில் தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசாரும் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கும் அந்த குழந்தை பற்றி விசாரித்தனர். 2 வாரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்ச தாய் யார்?, அந்த குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததா? அல்லது யாராவது கடத்தி கொண்டு வந்து வீசி சென்றார்களா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் குழந்தையை வீசி சென்றது பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து அந்த குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story