பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.16.21 நிர்ணயம்
நீலகிரியில் கடந்த மாத சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.16.21 ஆக தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து உள்ளது.
குன்னூர்,
நீலகிரியில் கடந்த மாத சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.16.21 ஆக தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து உள்ளது.
விலை நிர்ணயம்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் மட்டுமின்றி, 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளும் தேயிலை விவசாயத்தில் ஈடுட்டு வருகின்றனர். தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது இல்லை என்றும், மத்திய அரசு தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைதொடர்ந்து தேயிலை வாரியம் மூலம் மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய நீலகிரியில் விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாதந்தோறும் தேயிலைக்கு சராசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் மாத சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.16.21 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் டாக்டர் எம்.முத்துகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
உறுதிப்படுத்த வேண்டும்
2021-ம் ஆண்டின் தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு ஆணையின்படி பச்சை தேயிலையின் மாவட்ட சராசரி விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு 16 ரூபாய் 21 பைசா நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை கடந்த மாதம் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் வாங்கும் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சி.டி.சி. தேயிலைத்தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த சராசரி விலையை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை வாங்கும் தொழிற்சாலைகள், தேயிலை சிறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சராசரி விலை வழங்குவதை தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை வளர்ச்சி உதவி இயக்குநர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.