பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.12.68 நிர்ணயம்
பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.12.68 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தென்மண்டல செயல் இயக்குனர் தெரிவித்தார்.
குன்னூர்
பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.12.68 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தென்மண்டல செயல் இயக்குனர் தெரிவித்தார்.
பச்சை தேயிலை
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் ஏராளமான கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன.
விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைக்கு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.
12 ரூபாய் 68 பைசா
இதற்கிடையில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாதந்தோறும் தேயிலை வாரியம் முன்வந்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி மாவட்ட அளவில் விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மூலம் மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம்(ஜூன்) விவசாயிகள் வினியோகித்த பச்சை தேயிலை கிலோவுக்கு 12 ரூபாய் 68 பைசா என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் முத்துக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
உறுதி செய்ய வேண்டும்
2021-ம் ஆண்டு தேயிலை(சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு ஆணைப்படி பச்சை தேயிலைக்கு மாவட்ட சராசரி விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் விவசாயிகள் வினியோகித்த பச்சை தேயிலை கிலோவுக்கு 12 ரூபாய் 68 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த விலை கடந்த மாதத்தில் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சி.டி.சி. தேயிலைத்தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிர்ணயித்த விலையை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் சிறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதை தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை வளர்ச்சி உதவி இயக்குனர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.