பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18.58 விலை நிர்ணயம்-செயல் இயக்குனர் தகவல்


பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18.58 விலை நிர்ணயம்-செயல் இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நீலகிரி

குன்னூர்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18.58 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தேயிலை வாரிய செயல் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

பச்சை தேயிலை

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது. தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் மட்டுமின்றி சிறு விவசாயிகளும் தேயிலை விவசாயத்தில் ஈடுட்டு வருகின்றனர். தேயிலை விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலைக்கு கட்டுபடியான விலை கிடைப்பது இல்லை என்றும் மத்திய அரசு பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன்படி மத்திய அரசின் தேயிலை வாரியம் மூலம் மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய மாவட்டத்தில் விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பச்சை தேயிலைக்கு சராசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 58 காசு என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் டாக்டர் எம்.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ரூ.18.58 விலை நிர்ணயம்

2021-ம் ஆண்டின் தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுப்பாட்டு ஆணையின்படி பச்சை தேயிலையின் மாவட்ட சராசரி விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 58 காசு நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் வாங்கும் தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சிடிசி தேயிலை தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சராசரி விலையை மாவட்டத்திலுள்ள அனைத்து வாங்கும் தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை சிறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story