தர்மபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.9¾ லட்சத்தில் 16 பேருக்கு நலத்திட்ட உதவி-கலெக்டர் சாந்தி வழங்கினார்


தர்மபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.9¾ லட்சத்தில் 16 பேருக்கு நலத்திட்ட உதவி-கலெக்டர் சாந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.9¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 336 மனுக்கள் அளிக்கப்பட்டன.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.

3 சக்கர சைக்கிள்

இந்த கூட்டத்தில் 2 கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் 3 சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை கலெக்டர் உடனடியாக வழங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று விபத்து மற்றும் இயற்கை மரணம் அடைந்த 13 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.7 லட்சத்து 65 ஆயிரம் நிதி உதவிக்கான காசோலைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

நிவாரண நிதி

இதேபோல் எதிர்பாராத விதமாக மரணமடைந்த 2 பழங்குடியினரின் வாரிசுதாரர்களுக்கு பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண நிதி உதவிக்கான காசோலைகளையும் கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தொழிலாளர் உதவி ஆணையர் முத்து உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story