குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 688 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மட்டும் மொத்தம் 73 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்து 914 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அடிப்படை வசதிகள் வேண்டும்
கூட்டத்தில் குளித்தலை வட்டம், பரளி கிராமம், ராஜேந்திரம் ஊராட்சி 8-வது வார்டு ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் 8-வது மற்றும் 9-வது வார்டில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் பொதுகழிவறை கட்ட ஆரம்பித்து முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. கால்வாய் வசதி மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதோடு சரியாக தூர்வாராமல் இருப்பதால் ஊர்பொதுமக்கள் நோய் உள்ளிட்டவற்றால் பாதிப்படைந்து வருகிறோம். தெருவிளக்குகள் முறையான பராமரிப்பின்றி சரிவர எரியாத சூழல். குடிநீரும் தட்டுப்பாடாக இருந்து வருகிறது.
இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் ஊரில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்காமல் பாரபட்சத்தோடு செயல்படுகிறார்கள். எனவே எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தேவருக்கு வெங்கல சிலை
கரூர் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழு உருவ வெங்கல சிலையை புலியூர், பஞ்சமாதேவி, ராயனூர் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் சிலையை வைக்க அனுமதி வழங்க வேண்டும், மேலும் சிலை வைக்க ஆகும் செலவினத்தை எங்களது கட்சியின் சார்பில் ஏற்கொண்டு, அந்த சிலையையும் பராமரிப்போம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.