குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மொத்தம் 477 மனுக்கள் பெறப்பட்டன.மாற்றுத்திறனாளிகளிடம் 67 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 95 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 68 ஆயிரத்து 730 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மனு
கூட்டத்தில் கரூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அரசு அனுமதி பெற்று சங்கம் நடத்தி வருகின்றோம். எங்கள் சங்க உறுப்பினரான கருப்பையா என்பவர் புகழூர் ரெயில்வே கேட் அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடைக்கு வந்த ஒருவர் இருமுறை முடிவெட்டி கொண்டு கட்டணம் தரவில்லை. 3-வது முறை வந்தபோது, முன் செய்த வேலைக்கு பணத்தை கொடுக்கும்படி கருப்பையா கேட்டுள்ளார். அப்போது கருப்பையாவை திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார்.
பாதுகாப்பு வேண்டும்
தற்போது வரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எங்கள் சங்கத்தின் சார்பிலும், பாதிக்கப்பட்டவர் சார்பிலும் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் தாக்கியவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே எங்கள் சமுதாய தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தந்தும், எங்களது சங்க உறுப்பினரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.