கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 587 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 57 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
கூட்டத்தில் லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் பள்ளியில் 817 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 35 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இந்த பள்ளி வளாகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், கழிவறைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவ-மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொட்டியை சீரமைக்க கோரிக்கை
வெள்ளியணை அருகே உள்ள வாழியாம்புதூரை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்புசாமி கொடுத்த மனுவில், வாழியாம் புதூரில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது.
தற்போது குடிநீர் தொட்டி பழுதடைந்து உள்ளதால் அதன் உள்ளே இறங்கி கழுவ முடியாமல் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் பஸ் இயக்க வேண்டும்
கரூர் ரெங்கநாதன் பேட்டையை சேர்ந்த சிலர் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து நெரூர் சதாசிவம் கோவில் வழியாக திருமுக்கூடலூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததில் இருந்து இதுநாள் வரை அந்த டவுன் பஸ் இயக்கப்படாமல் உள்ளது.
இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.