போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில், காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புதிதாக 15 மனுக்களும், ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து விசாரணைக்கு உட்படுத்தப்படாத 20 மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
அப்போது நாட்டறம்பள்ளி பேரூராட்சி கவுன்சிலர் இல குருசேவ், பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்க சென்றபோது இன்ஸ்பெக்டர் தன்னை மிரட்டி, இதுபோன்று அடிக்கடி போராட்டம் நடத்தினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்தார்.
ஆம்பூர் வட்டம், வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவர் தனது மனைவி ராதாவுடன் வந்து கொடுத்த மனுவில், எங்களது மகன் முரளி, மருமகள் சந்தியா இருவரும் சேர்ந்து வீட்டை எங்கள் பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என கூறி என்னையும் என் மனைவியையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.