கடலூரில் குறைகேட்பு கூட்டம்: வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை


கடலூரில் குறைகேட்பு கூட்டம்: வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு கலெக்டரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதன்படி பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்த பழைய காலனி மக்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள், கடந்த 1984-ம் ஆண்டு ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்தில் நாங்கள் வீடு கட்டி குடியேறினோம். அதன்பிறகும் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதால், இது வரை எங்களுக்கு மனைப்பட்டா வழங்கவில்லை. மாவட்ட கலெக்டராகிய தாங்களும் காலதாமதம் செய்யும் வகையில் நடந்து கொள்கிறீர்கள் என்று அவரை முற்றுகையிட்டனர்.

வாக்குவாதம்

பின்னர் இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார். அதை ஏற்காத அவர்கள், தொடர்ந்து ஆதிதிராவிட நல தனி தாசில்தாரும் பொய்யான தகவலை கூறி, காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் அந்த மனுவை வாங்கிய கலெக்டர், இது பற்றி அருகில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலரை சந்தியுங்கள் என்றார். அதற்கு அவர்கள், தாங்களே நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலரை நாங்கள் ஏன்? சந்திக்க வேண்டும் என்று கூறி, கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வந்து, அவர்களை சமாதானம் செய்தனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் வரை செல்ல மாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர். இதை பார்த்த மாவட்ட வருவாய் அலுவலர், சிறிது நேரம் கழித்து என்னை சந்தியுங்கள் என்று கூறினார். இதை கேட்ட அவர்கள் அங்கிருந்து வெளியேறி காத்திருந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகனை சந்தித்தனர். அவர் ஆவணங்களை சரிபார்த்து நாளை (புதன்கிழமை) நேரில் வந்து விசாரணை நடத்துவதாக கூறினார். இதை கேட்ட அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story