குறைந்த வாடகையில் நெல் அறுவடை எந்திரத்தை வழங்க குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்


குறைந்த வாடகையில் நெல் அறுவடை எந்திரத்தை வழங்க குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jun 2023 11:23 PM IST (Updated: 16 Jun 2023 11:36 PM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களுக்கு இணையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் நெல் அறுவடை எந்திரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

திருவண்ணாமலை

டெல்டா மாவட்டங்களுக்கு இணையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் நெல் அறுவடை எந்திரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, ''டெல்டா மாவட்டங்களுக்கு இணையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. நெல் அறுவடைக்கு குறைந்த வாடகையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நெல் அறுவடை எந்திரத்தை வழங்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த நெல் அறுவடை எந்திரம் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சென்றது. பின்னர் இங்கு ெகாண்டு வரப்படாததால் தனி நபர்களிடம் இருந்து அதிக வாடகை கொடுத்து நெல் அறுவடை எந்திரத்தை பயன்படுத்தி வருகிறோம்.

தனி நபர்களின் நெல் அறுவடை எந்திரத்துக்கு வாடகையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்யவேண்டும்'' என்றனர். பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புதியதாக நெல் அறுவடை எந்திரம் வாங்கப்படும். மேலும் நெல் அறுவடை எந்திரம் வைத்திருப்பவர்களை அழைத்து பேசி விரைவில் வாடகையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

நேரடி நெல்கொள்முதல் நிலையம்

தொடர்ந்து விவசாயிகள் கூறுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும். சாத்தனூர் அணை திறக்கப்பட்டும் ராதாபுரம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. எனவே ஏரி கால்வாய்களை தூர்வார வேண்டும். நுகர்வோர் குறைதீர்வு கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து விற்பனையை தடுக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்று தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

விவசாயி போராட்டம்

முன்னதாக செய்யாறு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் நெற்றியில் நாமம் போட்டு, வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில், குறைதீர்வு கூட்டத்தில் முறையாக விவசாயிகளை பேச விடுவதில்லை. விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரிடம் அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story