மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மளிகைக்கடைக்காரர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மளிகைக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் மாவட்டம், நெஞ்சிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 48). இவர் பள்ளபட்டி பிரிவு என்னும் இடத்தில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் சின்னதாராபுரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். ஒத்தமாந்துறை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் சங்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சங்கரனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சின்னதாராபுரம் போலீசார் சங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கார் டிரைவர் நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். காரில் வந்தவர்கள் பழனி கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.