திருமணமான 2-வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
கருங்கல் அருகே திருமணமான 2-வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்:
கருங்கல் அருகே திருமணமான 2-வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
எல்லை பாதுகாப்பு படை வீரர்
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி வடக்கு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டேவி. இவருடைய மகன் சுபின் (வயது 32). இவர் எல்லை பாதுகாப்பு படையில் 10 வருடங்களாக வேலை செய்து வந்தார்.
இவருக்கும், விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்த உறவினரின் மகளுக்கும் திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து திருமணத்திற்காக 45 நாட்கள் விடுமுறையில் சுபின் 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
திருமணம்
இந்த நிலையில் சுபினுக்கு திடீரென்று இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
அதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை சுபினுக்கு திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். அன்று மாலை சுபின் வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் சுபின் திருமணத்தின் போது உற்சாகமின்றி சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுபின் தனது வீட்டில் உள்ள இரும்பு கொக்கியில் கைலியால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை கீழே இறக்கி கருங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு இறந்து விட்டதாக கூறினார்.
காரணம் என்ன?
இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவி இரவு தூங்கிய பிறகு சுபின் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். சுபின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமணமான 2-வது நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.