புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
விஷம் குடித்தார்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கராண்டி காலனியை சேர்ந்த ராமரின் மகன் திருநாவுக்கரசு(வயது 35). இவருக்கு திருமணம் செய்வதற்காக ஒரு பெண்ணை பார்த்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயம் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து கடந்த 29-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பு நடந்துள்ளது. மேலும் மறுநாள் நடைபெற இருந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருமணம் நடைபெறவில்லை
இந்நிலையில் இரவில் தூங்கச்சென்ற திருநாவுக்கரசு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் 30-ந் தேதி திருமணம் நடைபெறவில்லை. இதற்கான திருமணத்திற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் வீணானது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாகினர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திருநாவுக்கரசு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மணமகனாக பார்க்க வேண்டியவரை உயிரற்ற உடலாக கண்ட திருநாவுக்கரசுவின் உறவினர்கள் கதறி அழுதது, கல்மனம் படைத்தவர்களையும் கலங்க செய்வதாக இருந்தது. புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.