தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம்
தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி அமைத்து அதற்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளை சட்டத்துக்கு புறம்பாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு. திருச்சி மாநகர தரைக்கடை, தள்ளுவண்டிக்கடை, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு திருச்சி மாவட்ட தரைக்கடை சங்க தலைவர் ஆர்.கணேசன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர், அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனுவை கொடுத்தனர்.
இதேபோல் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்பட மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.