கசக்கால்வாய்கள் தூர் வாரப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கசக்கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் நிலத்தடி நீட்மட்டம் உயர்ந்துள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.
கலெக்டர் பார்வையிட்டார்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கரிவேடு ஊராட்சியில் உள்ள கசக்கால்வாயினை உலக வங்கி நிதி ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து, தற்பொழுது கால்வாயில் இயற்கை நீர் ஊற்று தண்ணீர் சென்று கொண்டிருப்பதையும், கரிவேடு பெரிய ஏரி தூர்வாரப்பட்டு புனரமைக்கப் பட்டுள்ளதையும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் பார்வையிட்டார்.
இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-
ராணிப்பேட்டையின் சிறப்பம்சமாக 23 கசக்கால்வாய்கள் உள்ளன. தாமல் கசக்கால்வாய் மூலம் தாமல் ஏரிக்கு தண்ணீர் சென்றடைகிறது. இதிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் நீரானது தாமல் ஏரிக்கு சென்று அது நிரம்பிய பிறகு வழியும் நீரானது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 15 ஏரிகளுக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 17 ஏரிகளுக்கும் செல்கின்றது. இதனால் மூன்று போகம் பயிரிட ஏதுவாக உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தாமல் ஏரி மற்றும் அதன் கீழ்உள்ள மற்ற ஏரிகளிலும் தண்ணீர் வரத்துக்கு ஏற்ப இரண்டு முதல் மூன்று போகம் விளைச்சல் மேற்கொள்ளப்படுகின்றது. இரண்டு கால்வாய்களும் மழை காலத்திற்கு முன்பே தூர்வாரப்பட்டதால் இக்கால்வாயின் மூலம் பயன்பெறும் அனைத்து ஏரிகளும் நிரம்பி 15 நாட்களுக்கு மேலாக வழிந்தோடுகின்றன.
நிலத்தடிநீர் மட்டம் உயர்வு
நீர்வள உபவடிநில மேம்பாட்டு திட்டத்தின் மூலம் உலக வங்கி நிதி ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இந்த கசக்கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டுமே இதுபோன்ற சிறப்புமிக்க 23 கசக்கால்வாய்கள் உள்ளன. அதேபோன்று, நீராதாரங்களை பெருக்குவதில் கசக்கால்வாய்கள் முக்கியப் பங்காற்றுகின்றது. இந்த கசக்கால்வாய்கள் தூர்வரப்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் இந்த ஆண்டு 4.3 மீட்டராக உயர்ந்து உள்ளது. கசக்கால்வாய்களை தூர்வாரியதன் காரணமாக 40 ஆண்டுகளுக்கு பின்னர் பனப்பாக்கம் ஏரி தற்போது தான் முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதே போன்று முருங்கை ஏரியும் 70 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. ஆதலால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீதமுள்ள 22 கசக்கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளும், நீராதாரங்களை பாதுகாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும்.
கரிவேடு ஏரியும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நிரம்பி வழிகின்றது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர்கள் மெய்யழகன், கரிவேடு சிவப்பிரகாசம் மற்றும் பலர் உடனிருந்தனர்.