வண்டியூர் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு - மதுரை ஐகோர்ட்டில் தகவல்


வண்டியூர் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக  தண்ணீர் தேக்கியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு - மதுரை ஐகோர்ட்டில் தகவல்
x

மதுரை தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


மதுரை தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு

வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளை அகற்றி பாதுகாப்பது, தடுப்பணைகள் கட்டக்கோருவது, மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றி, பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

தடுப்பணை கட்டுமான பணி

இதுதொடர்பாக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வைகை ஆற்றில் இதுவரை 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 4 தடுப்பணைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. வண்டியூர் கண்மாய் பகுதியை நவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா மையமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வைகையில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, வண்டியூர் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்பகுதி முழுவதும் நிலத்தடிநீர் மட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மதுரை நகரிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தடுப்பணை அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story