கொட்டி வைக்கப்பட்டுள்ள மர்ம கழிவுகளால் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர்
கொட்டி வைக்கப்பட்டுள்ள மர்ம கழிவுகளால் சிவப்பு நிறமாக நிலத்தடி நீர் மாறியது.
விராலிமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் காமுமணி தலைமையில் ஒன்றியகுழு கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டாரம்) சாமிநாதன் வரவேற்று பேசினார். தொடர்ந்து அலுவலக மேலாளர் கண்ணன் தீர்மானங்களை வாசித்தார். இதில் ஒன்றிய பொது செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து உறுப்பினர்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து பேசினர். அப்போது விராலிமலை சுடுகாடு அருகே அதிகளவில் குப்பைகளை கொட்டி வைப்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு கட்டப்பட்டுள்ள குப்பை தரம் பிரிக்கும் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விராலிமலை செக்போஸ்டில் சாலையின் நடுப்பகுதி வரை இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விராலிமலையில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் கோமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட தாளப்பட்டி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுமார் 30 லாரிகளில் கொண்டுவரப்பட்ட மர்ம கழிவு பொருட்களை 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொட்டி வைத்துள்ளனர். கடந்த வருடம் அதிக மழை பெய்ததால் அந்த கழிவு மழை நீருடன் சேர்ந்து பூமியில் இறங்கி நிலத்தடி நீர் சிவப்பு நிறமாக மாறிவிட்டது. அதனால் கிணறு, ஆழ்குழாய்கிணறு, அடி பம்பு உள்ளிட்ட அனைத்து நிலத்தடி நீரும் சிவப்பு நிறமாக வெளியேறி வருகிறது. அந்த நீரை விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதால் அதிலிருந்து விளைவிக்கக்கூடிய அரிசி, காய்கறிகளால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும் அங்குள்ள தண்ணீரை கால்நடைகள் அருந்துவதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே அப்பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.