தேர்வு தொடங்கும்போதே குரூப்-2 வினா-விடை பொதுவெளியில் பரவியதா?- டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தேர்வு தொடங்கும்போதே குரூப்-2  வினா-விடை பொதுவெளியில் பரவியதா?- டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தேர்வு தொடங்கும்போதே குரூப்-2 வினா-விடை பொதுவெளியில் பரவியதா? என்பதை டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு அறிவிப்பாணை வெளியானது. இந்த தேர்வுகள் 3 கட்டங்களாக நடக்கும். அதன்படி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதால், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் நிலை மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டேன்.

அந்த தேர்வு நடந்த அறையில் வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் என்னுடைய தேர்வு எண்ணுக்கு பதிலாக மற்றொருவரின் எண் இருந்தது. இது தொடர்பாக கேள்வி எழுப்பினேன். என்னை போல பலரும், தேர்வு எண் மாறி இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அந்த தேர்வு தொடங்குவது சற்று நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்ட பலர், வினாத்தாளில் இருந்த கேள்விகளுக்கான பதில்களை செல்போன்களில் ஆராய்ந்து ஒருவருக்கு ஒருவர் அனுப்பிவிட்டனர்.

சிறிது நேரத்தில் வினாத்தாள்கள் சரி செய்யப்பட்டு, எங்களிடம் அளிக்கப்பட்டது. இதனால் தாமதமாக தேர்வு தொடங்கியது. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே எங்களிடம் இருந்து வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பெற்று, தேர்வு அறையில் இருந்து வெளியில் அனுப்பிவிட்டனர். ஆனால் அந்த தேர்வு வளாகத்தில் மற்ற அறைகளில் தேர்வு தொடர்ந்து நடந்தது. முறையாக குரூப்-2 தேர்வு நடக்கவில்லை. பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட இந்த தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


Next Story