இயற்கை உரங்களை பயன்படுத்தி நாட்டு காய்கறிகளை விளைவிக்க வேண்டும்
இயற்கை உரங்களை பயன்படுத்தி நாட்டு காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ராணிப்பேட்டை நகராட்சி வாரச்சந்தை பகுதியில் உழவர்சந்தை செயல்படுகிறது. இங்கு நேற்று கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறியதாவது:-ராணிப்பேட்டை உழவர் சந்தை மொத்தம் 48 கடைகள் உள்ளன. இங்கு வேளாண் விலைப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் 445 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
உழவர் சந்தையில் டிஜிட்டல் விலை பட்டியல் ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் மீதமாகும் காய்கறி கழிவுகள் மக்கும் உரமாக மாற்றிட அரவை எந்திரம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 400 கிலோ கழிவுகள் சேர்ந்த பின் இயந்திரத்தில் கொட்டப்பட்டு அரைத்து மக்க வைக்கப்படுகிறது. நாள்தோறும் 25 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஒவ்வொரு கடையாக மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
விவசாயிகள் நாட்டு காய்கறிகளை உற்பத்தி செய்திட வேண்டும், இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என அப்போது கலெக்டர் வளர்தமதி அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) வடமலை, துணை இயக்குநர் விஸ்வநாதன், தோட்டக்கலை இயக்குநர் லதா, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் வேளாண் அலுவலர் சுரேஷ் குமார், உழவர் சந்தை துணை வேளாண்மை அலுவலர் முருகன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.