ஜி.எஸ்.டி. வருவாயில் 2 சதவீதம் வணிகர்களுக்கு ஒதுக்க வேண்டும்


ஜி.எஸ்.டி. வருவாயில் 2 சதவீதம் வணிகர்களுக்கு ஒதுக்க வேண்டும்
x

ஜி.எஸ்.டி. வருவாயில் 2 சதவீதம் வணிகர்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று வேலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

வேலூர்

முப்பெரும் விழா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்டம் சார்பில் தமிழர் திருநாள், விருதுகள் வழங்குதல், வேலூர் மாவட்ட சங்க பொதுக்குழு என்று முப்பெரும் விழா வேலூரில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ரா.ப.ஞானவேலு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன், மாநில இணைச்செயலாளர் முல்லை சுந்தரேசன், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.வி.எம்.குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

பின்னர் "ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு ஏன்" என்ற தலைப்பில் ஏ.எம்.விக்கிரமராஜாவும், "தமிழர் திருநாள்" என்ற தலைப்பில் ஜி.விசுவநாதனும் சிறப்புரையாற்றினார்கள்.

செம்மல் விருது

தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வேலூர் மாவட்ட வெல்லமண்டி வணிகர்கள் சங்க தலைவர் ஆர்.ஜி.தர்மராஜ், வேலூர் மாவட்ட வெல்ல தர்மஸ்தாபன இயக்குனர் கே.ஆர்.விஜயன், வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கனி வணிகர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த ஏ.பாலு ஆகியோருக்கு வணிகர் செம்மல் விருதை ஏ.எம்.விக்கிரமராஜா, ஜி.விசுவநாதன், டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் வழங்கினர். பாலு சார்பில் அவருடைய மனைவி இந்த விருதை பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் சங்க மாநில பொருளாளர் சதகத்துல்லா, வேலூர் மண்டலத் தலைவர் கிருஷ்ணன், வேலூர் மாவட்ட பொருளாளர் அமீன்அகமது ஆலியார், மாவட்ட இணைச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் சரவணன், நகர செயலாளர் பாபுஅசோகன், நகர துணைசெயலாளர்கள் திவ்யா சீனிவாசன், அம்மன் ஸ்ரீராம்பிரபு மற்றும் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜி.எஸ்.டி. வருவாயில் 2 சதவீதம்

பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோட்டில் வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெறும் வணிகர் தின மாநில மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 7 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வருவாயில் 2 சதவீதம் வணிகர்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அதன்மூலம் சாமானிய, பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாலை விரிவாக்கம், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. 2 சதவீத வருவாயில் இருந்து இழப்பீடு அல்லது உதவித்தொகை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான கடைகளில் வாடகை முறைபடுத்துவதில் விரைவில் தீர்வு காணப்படும் என அரசு தரப்பில் கூறியுள்ளனர்.

பொது ஏலம்

பஸ் நிலையங்கள், வணிகவளாகங்களில் உள்ள பழைய கடைகளை இடித்து புதிதாக கட்டப்படும் கடைகளுக்கு, பழைய ஆட்களுக்கு முன்னுரிமை அளித்து கடை ஒதுக்க வேண்டும். அதன்பின்னர் மீதமுள்ள கடைகளை பொதுஏலம் விட வேண்டும்.

எங்களை பொறுத்தவரை வேலைக்கு ஆட்கள் தேவை. எனவே வடமாநிலம், மேற்குமாநிலம், கிழக்குமாநிலம், தென்மாநிலம் என்று பிரித்து பார்க்க முடியாது. யார் வேலைக்கு வந்தாலும் அவர்களை சேர்த்து கொள்வோம். தமிழக இளைஞர்கள், கஞ்சா, போதை பழக்கத்திற்க்கு ஆளாகாமல் உழைக்க முன் வர வேண்டும். தமிழக நிதிநிலை அறிக்கையில் உள்ளாட்சி நகராட்சி கடை வாடகையை சீர்படுத்திட வேண்டும். கடைக்கு லைசன்ஸ் முறையை சிங்கல் விண்டோவாக அமைத்து தர வேண்டும் என்பது இடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கு முன்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை அழைத்து பேசுவார். அப்போது எங்களின் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story