ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? தர்மபுரி மாவட்ட வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து
தர்மபுரி:
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து தர்மபுரி மாவட்ட வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி.
வரி விதிப்பு என்பது மன்னர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு வருகிறது. மக்கள் செலுத்தும் வரி மட்டும் இல்லை என்றால், அரசுகள் செயல்படமுடியாது. வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே அரசுகள் மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி, செயல்படுத்துகின்றன. வரிகளை பொறுத்தமட்டிலும், நேரடி வரி மற்றும் மறைமுக வரி என்ற 2 பிரிவுகள் உள்ளன. அந்தவகையில், சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. மறைமுக வரியாகும். ஜி.எஸ்.டி. வரி முறையை உலகிலேயே முதலாவதாக 1954-ம் ஆண்டு பிரான்சு நாடு அறிமுகப்படுத்தியது.
தற்போது அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியான்மர் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற தலைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. மத்திய கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, பொழுதுப்போக்கு வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்பட வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக ஜி.எஸ்.டி. இருக்கிறது.
ஒரே வரி விகிதம்
நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஒரே மாநிலத்துக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் அதாவது மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (எஸ்.ஜி.எஸ்.டி.) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. அதன் வருவாயை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ.ஜி.எஸ்.டி.) மத்திய அரசினால் விதிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 நிலைகளில்(சிலாப்ஸ்) வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வரி விதிப்பு முறை என்பது, சேவை துறைகளுக்கு கட்டுமான உருவாக்கத்துக்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருப்பதால், ஜி.எஸ்.டி.யில் ஒரே நிலையில் அதாவது விலக்கு எதுவும் இல்லாமல் ஒரே விகிதத்தில் (ஒரே சிலாப்) வரி விதிப்பினை கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சாத்தியமா?
ஜி.எஸ்.டி. என்பது 'ஒரே நாடு ஒரே வரி' என்ற அடிப்படையில் உருவானது. நாடு முழுவதும் ஒரே சீராக விதிக்கப்படும் அதில், வரி விகிதங்களில் சில பிரிவுகள் இருக்கின்றன. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரின் கருத்து ஏற்கப்பட்டால், 'ஒரே நாடு ஒரே வரி' என்ற நிலையில் இருந்து 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே வரி விகிதம்' என்ற நிலைக்கு ஜி.எஸ்.டி. மாறிவிடும். 'ஒரே ஜி.எஸ்.டி., ஒரே வரி' என்ற முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு முனை வரி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன்:-
ஜி.எஸ்.டி. வந்த பிறகு, எந்த பொருளுக்கு, எந்த வரி விகிதம் என்று வியாபாரிகளுக்கே சற்று குழப்பமாக இருக்கிறது. பலதரப்பட்ட பொருட்கள் இருப்பதால் வரியை கணக்கிட்டு செலுத்துவதில் சிக்கல் இருக்கிறது. குழப்பமாக இல்லாமல் ஒரு முனை வரியாக போட்டால் நன்றாக இருக்கும். இதேபோல பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களுக்கு வரியே இல்லாமல் இருந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.
கடும் பாதிப்பு
தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்திலிங்கம்:-
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டபோது ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இந்த வரி மூலம் வருமானம் வந்தால் மற்ற அனைத்து வரிகளும் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. இருந்த போதிலும் மற்ற வரிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிகர்களின் கணக்கு லாக் செய்யப்படுகிறது. இதனால் வணிகர்கள் அந்த கணக்கு மூலம் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
ஜி.எஸ்.டி. வரியை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வணிகர்களுக்கு தபால் மூலம் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளித்துறை உள்பட பல்வேறு வகையான துறைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. சிறு வணிகம் சார்ந்த தொழில்கள் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண குறைவான சதவீதத்தில் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் உணவு, உடை ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்தால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
வரி சுமை குறையும்
தர்மபுரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் வேணுகோபால்:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை நடைபெறும் விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியாக 5 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உணவு சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளுக்கு 1 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவை ஆகியவற்றில் ஈடுபடும் ஓட்டல்களுக்கும் 1 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளை பொறுத்தவரை ரூ.2 ஆயிரத்து 500 வரை கட்டணத்திற்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியும், ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை கட்டணத்திற்கு 18 சதவீத வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகளை குறைத்து ஒரே வரியை விதித்தால் அனைவருக்கும் வரி சுமை குறையும்.
ஒரே வரி வரவேற்கத்தக்கது
ஆடிட்டர் பழனிசாமி:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வெவ்வேறு சதவீதங்களுடன் 4 நிலைகளில் வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்த வரி விதிப்பு வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. வரியை செலுத்தும் வணிகர்கள், தொழில் முனைவோர் இந்த வரியை செலுத்துவதில் பல்வேறு நடைமுறை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
எனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சதவீதத்தை முடிந்தவரை குறைக்க வேண்டும். ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது.
ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா?
பாலக்கோட்டை சேர்ந்த குடும்ப தலைவி இந்திராணி:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்பட அனைத்து விதமான பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது. இந்த விலைவாசி உயர்வு ஏழை, எளிய குடும்பங்களை கடுமையாக பாதிக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பு பொருட்களின் விலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்தது. இதை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டு அதன் மூலம் விலைவாசி குறைந்தால் ஏழை, எளியோர் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.