சேலம் ஆணையரகத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.3,162 கோடியாக உயர்வு-ஆணையர் ராமகிருஷ்ணன் பெருமிதம்


சேலம் ஆணையரகத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.3,162 கோடியாக உயர்வு-ஆணையர் ராமகிருஷ்ணன் பெருமிதம்
x
தினத்தந்தி 2 July 2023 2:02 AM IST (Updated: 2 July 2023 2:56 PM IST)
t-max-icont-min-icon

சேலம் ஆணையரகத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.3,162.85 கோடியாக உயர்ந்துள்ளதாக ஆணையர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

சேலம்

சேலம்,

ஜி.எஸ்.டி. தின விழா

சேலம் அணைமேடு பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் நேற்று ஜி.எஸ்.டி. தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணை ஆணையாளர் தீப்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தெற்கு ரெயில்வே சேலம் மண்டல கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, மாநில ஜி.எஸ்.டி. இணை ஆணையாளர் ஜெயராமன், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் பொது மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் ஆணையர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. தினத்தின் உட்கருத்து என்னவென்றால் எளிமைப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை கொண்டாடுதல் ஆகும். ஜி.எஸ்.டி.யானது கடந்த 6 ஆண்டுகளில் தொழில் முனைவோருக்கு தேவையான சீர்திருத்தங்களை சட்டத்தில் உடனுக்குடன் இணைத்து, இதுவரை 49 ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்று வரி செலுத்தும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் உயர்வு

ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் ஆணையரகத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது. இந்த நிலையில் இந்தாண்டு ஜூன் மாதம் வரை வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 74 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட கால கட்டத்தில் இருந்து தற்போது வரை சுமார் 110 சதவீதம் உயர்ந்துள்ளது. சேலம் ஆணையரகத்தில் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் வரி வருவாய் ரூ.1,358.31 கோடியாக இருந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் வரி வருவாய் ரூ.3.162.85 கோடியாக உயர்ந்துள்ளது. இது 132 சதவீத உயர்வாகும். வணிகர்கள் மற்றும் வியாபாரிகளை தொடர்பு கொள்ளும் போது டி.ஐ.என். எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சான்றிதழ்

விழாவையொட்டி நடைபெற்ற திறனறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், சிறப்பாக அலுவல் பணி செய்தவர்கள் மற்றும் உலக ரத்ததான தினத்தில் ரத்த தானம் செய்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக செயல்பட்ட தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முடிவில் உதவி ஆணையர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.


Next Story