ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு 'குவா, குவா'
பேரணாம்பட்டு அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள சிவனகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், தொழிலாளி இவரது மனைவி கவுசல்யா (வயது 22) இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கவுசல்யா 2-வது முறையாக கர்ப்பிணியானார். நிறைமாத கர்ப்பிணியான கவுசல்யாவிற்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வலி அதிகரித்தது.
உடனடியாக கவுசல்யா குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுசல்யாவை மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் நடுவழியில் மீண்டும் பிரசவ வலி அதிகரித்தது
108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சுஸ்மிதா ஆம்புலன்சை அடர்ந்த வனப்பகுதி நிறைந்த சாலையில் ஆம்புலன்சை நிறுத்தி கவுசல்யாவிற்கு பிரசவம் பார்த்தார். காலை 6.14 மணியளவில் கவுசல்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயும், சேயும் மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ அலுவலர் கலைச்செல்வி மற்றும் செவிலியர்கள் சிகிச்சையளித்தனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.