ரெயில் மோதி காவலாளி பரிதாப சாவு
களியக்காவிளை அருகே ரெயில்மோதி காவலாளி பரிதாபமாக பலியானார். இதனால், மாற்றுத்திறனாளிகளான குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
நாகர்கோவில்:
களியக்காவிளை அருகே ரெயில்மோதி காவலாளி பரிதாபமாக பலியானார். இதனால், மாற்றுத்திறனாளிகளான குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
காவலாளி
களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு மணப்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7.15 மணியளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக களியக்காவிளைக்கும், பாறசாலைக்கும் இடையே உள்ள ரெயில் தண்டவாள பகுதியில் ஸ்ரீகுமார் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
ரெயில் மோதியது
அப்போது அந்த வழியாக ஒரு ரெயில் வந்துள்ளது. இதைக்கண்ட ஸ்ரீகுமார் தண்டவாளத்தில் இருந்து ஒதுங்க முயன்றார். ஆனால், அவரால் ஒதுங்க முடியாத பகுதியில் சிக்கியதால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ரெயில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்ரீகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, ஏட்டு ஜெயசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ஸ்ரீகுமாரின் மகன் சிவபிரசாத் (21) கொடுத்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாற்றுத்திறனாளிகளான அவரது மனைவி, பிள்ளைகள் உள்பட 4 பேரும் அவரது உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சோகத்தில் மூழ்கிய குடும்பம்
இறந்த ஸ்ரீகுமாருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் 2 பேரும் பிளஸ்-2 முடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள். இதனால், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஸ்ரீகுமாரே செய்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கடைகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஸ்ரீகுமார், அதன்பிறகு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் தான் அவர் ரெயில் மோதி இறந்துள்ளார். அவர் இறந்ததால் பிள்ளைகளின் மேற்படிப்பு, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் மேற்படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணவரின் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் அவரும் இறந்து விட்டதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியது.