அரசு பஸ் மோதி காவலாளி பலி


அரசு பஸ் மோதி காவலாளி பலி
x

புதுக்கோட்டையில் அரசு பஸ் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

காவலாளி பலி

புதுக்கோட்டை காந்திநகர் 6-ம் வீதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 50). இவர் புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டியில் உள்ள ஷோரூமில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் டீக்கடைக்கு சைக்கிளில் சென்று விட்டு வாசுதேவன் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது புதுக்கோட்டையிலிருந்து பேராவூரணி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வாசுதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான வாசுதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்த வாசுதேவனின் உறவினர்கள் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story