காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
பாளையங்கோட்டையில் காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழக காவல்துறையில் கடந்த 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களின் 25-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் நாகசங்கர் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நெல்லை, தென்காசி மாவட்டம் மற்றும் நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் பயிற்சி காலங்களில் நடந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சி.சி.டி.என்.எஸ். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கமலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் பலர் செய்து இருந்தனர்.