ஊருக்குள் காட்டு யானை புகுவதை தடுக்கக்கோரி கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தேவர் சோலை பகுதி மக்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கூடலூர்
காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தேவர் சோலை பகுதி மக்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆர்.டி.ஓ அலுவலகம் முற்றுகை
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செருமுள்ளி, கோழி கண்டி, பன்னி மூலா உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை ஒன்று தினமும் ஊருக்குள் வந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் வாழை, பாக்கு விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் காட்டு யானை தொடர்ந்து ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் அதிருப்தியுடன் கூறினர். இந்த நிலையில் காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கூடலூர் ஆர.்டி.ஓ. அலுவலகத்தை தேவர் சோலை பகுதியைச் சேர்ந்த சுற்று வட்டார மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படும்
தொடர்ந்து ஆர்.டி.ஓ.விடம் புகார் அளிக்க பொதுமக்கள் அலுவலகத்துக்குள் சென்றனர். ஆனால் அங்கு ஆர்.டி.ஓ இல்லை. ஊட்டிக்கு சென்று விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தொலைபேசி மூலம் ஆர்.டி.ஓ விடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ உறுதி அளித்தார். இதேபோல் கூடலூர் வன அலுவலர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- செருமுள்ளி, கோழிக்கண்டி, பன்னி மூலா ஒரு பட பல்வேறு இடங்களில் காட்டு யானை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. தகவலின் பேரில் வனத்துறையினர் வந்து காட்டு யானையை விரட்டுகின்றனர். ஆனால் மீண்டும் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து விடுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.