சீருடை பணியாளர் தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் சீருடை பணியாளர் தேர்வுக்கான வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் சீருடை பணியாளர் தேர்வுக்கான வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சீருடை பணியாளர்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 615-க்கும் மேற்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் 2-ம் நிலை காவலர் பணியிடத்திற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
இத்தேர்வு குறித்த விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக மேற்கண்ட சீருடை பணியாளர் தேர்வு குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
இலவச பயிற்சி
இங்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. மேலும் இந்த எழுத்துத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு உடல் தகுதித்தேர்விற்கான இலவச பயிற்சியும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.
எனவே மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியினை 9499055904 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.