ஓமலூர் அருகே துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு: 2 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


ஓமலூர் அருகே துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு: 2 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x

ஓமலூர் அருகே துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு தொடர்பாக 2 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

துப்பாக்கிகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நண்பர்களான அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ஏற்காடு அடிவாரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூ-டியூப்பை பார்த்து துப்பாக்கிகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக அழகாபுரம் பகுதியை சேர்ந்த கபிலர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கபிலர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார்.

தீவிர விசாரணை

சிறையில் உள்ள சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சென்னை பூந்தமல்லி தனி கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலம் வந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை சென்னைக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களை சேலத்தில் வைத்து விசாரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story