மணல் கடத்தல் புகார் அளித்த விவசாயிக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
மணல் கடத்தல் புகார் அளித்த விவசாயிக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து, ஆடு, மாடுகள் வளர்ப்பு பணிகளையும் செய்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு, அகரம் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை பணியின்போது ஆற்றின் கரைப்பகுதியில் மணல் கடத்தல் நடக்கிறது, அதை ஒட்டியுள்ள சுடுகாட்டிலும் மண்ணை தோண்டியதால் எலும்புக்கூடுகள் வெளியே சிதறி கிடக்கிறது என முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனால் பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் வந்தது. இதன்பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த விசாரணையில், பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஆடு மேய்க்கும் விவசாயி பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்.
இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணன் கூறும்போது, எனக்கு கொலை மிரட்டல் வந்ததால் கடந்த இரண்டரை வருடங்களாக நீதிமன்ற உத்தரவின்படி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் இல்லாமல் என்னால் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை மணல் மாபியாக்களால் உள்ளது. தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிலுள்ள பால் மாடுகளில் இருந்து பால் கறக்க வேண்டும். ஒரு விஷேச நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றாலும் போலீசை உடன் அழைத்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனக்கு இது நீடிக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும், என்றார்.