கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் அடித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி குண்டர் சட்டத்தில் கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் அடித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

அரூர் அருகே காப்புக்காட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை அடித்துக்கொலை செய்த கட்டிட மேஸ்திரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

காப்புக்காட்டில் பெண் பிணம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீழானூர் காப்புக்காட்டில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி உடல் அழுகிய நிலையில், ஒரு பெண் இறந்து கிடந்தார். இதுபற்றி வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் கோட்டப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர்.

போலீசாரின் விசாரணையில் அந்த பெண் சித்தேரி பகுதியை சேர்ந்த பார்வதி (வயது 33) என்பது தெரியவந்தது. இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், பார்வதி கீரைப்பட்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

அடித்துக்கொலை

அப்போது வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சக்திவேலுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்தநிலையில் பார்வதி வேறு ஒருவருடன் பழகியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காப்புக்காட்டு பகுதிக்கு சென்ற சக்திவேலுக்கும், பார்வதிக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இரும்பு கம்பியால் பார்வதியை அடித்துக்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்தநிலையில் சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் சாந்தி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சக்திவேலை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து சக்திவேல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வழங்கப்பட்டது.


Next Story