204 பஞ்சாயத்துகளில் உடற்பயிற்சி கூடங்கள்-நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்


204 பஞ்சாயத்துகளில் உடற்பயிற்சி கூடங்கள்-நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
x

நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்துகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்துகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் 2020-21-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட பணிகளின் நிலை, புதிய திட்டம் தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கினார். செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ்குமார், அருண் தபசு, ஜான்ஸ் ரூபா, லிங்க சாந்தி, தனித்தங்கம், சத்தியவாணிமுத்து, கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாளையங்கோட்டை பாலசுப்பிரமணியன், களக்காடு முகைதீன் அப்துல்லா, மானூர் முத்துகிருஷ்ணன், பாப்பாக்குடி சங்கர் ராஜ், நாங்குநேரி கிஷோர் குமார், அம்பை ராஜாராம், ராதாபுரம் பிளாரன்ஸ் விமலா, வள்ளியூர் நடராஜ், சேரன்மாதேவி சங்கர் குமார் மற்றும் யூனியன் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

பணிகளை முடிக்க உத்தரவு

2020-21-ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் கழிவுநீர் ஓடை, சாலை வசதி, குடிதண்ணீர் வசதி உள்பட 48 பணிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் எந்தெந்த பணிகள் முடிவடைந்துள்ளது, நடந்துவரும் பணிகள், தொடங்கப்படாத பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

204 உடற்பயிற்சி கூடம்

கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்துகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க மாவட்ட பஞ்சாயத்து மூலம் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ரூ.8 கோடி செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். இந்த உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் கட்டிடங்களை பராமரிக்க குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் சில இடங்களில் மாடல் பள்ளி கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story