சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
தேவர்சோலை பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் வீட்டின் மேற்கூரைகள் பறந்து விழுந்தன.
கூடலூர்,
தேவர்சோலை பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் வீட்டின் மேற்கூரைகள் பறந்து விழுந்தன.
ஆலங்கட்டி மழை
நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளு, குளு காலநிலை நிலவுகிறது. கூடலூர் பகுதியில் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலையில் மழை பெய்து குளிர்ந்த காலநிலை காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு கூடலூர், தேவர்சோலை சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து தேவர்சோலை, தேவன், மேபீல்டு பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் ஆலங்கட்டிகள் சிதறி தரைகளில் விழுந்தது. சூறாவளி காற்றும் பலமாக வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழுந்தன.
வீட்டு மேற்கூரைகள் பறந்தன
இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தேவர்சோலை பகுதியில் மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சி அலுவலகம் அருகே நின்றிருந்த ராட்சத மரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் நின்றிருந்த பயணிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை.
இதேபோல் சூறாவாளி காற்றுடன் மழை பெய்ததால் தேவர்சோலை சின்னையன் காலனியில் சில வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்று விழுந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர். ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் விழுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பந்தலூர்
இதேபோல் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, அம்பலமூலா, நெலாக்கோட்டை, விலங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெலாக்கோட்டை-விலங்கூர் சாலையில் மூங்கில் மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மூங்கில் மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.