வெங்கனூரில் ஆலங்கட்டி மழை: சூறாவளி காற்றில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


வெங்கனூரில் ஆலங்கட்டி மழை: சூறாவளி காற்றில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x

வெங்கனூரில் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்றில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. வெங்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்றினால் பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் அருகே சாலையோரத்தில் இருந்த புளியமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த புளிய மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதேபோல் கிருஷ்ணாபுரம்- அரும்பாவூர் சாலையில் தொண்டமாந்துறை பிரிவு அருகே சாலையில் புளியமரம் ஒடிந்து விழுந்தது. அதனையும் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் பலத்த சூறாவளி காற்றினால் வெங்கலம், தழுதாழை, அன்னமங்கலம், விசுவகுடி, தொண்டமாந்துறை ஆகிய ஊர்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் காற்று, மழை நின்றபின் சீர் செய்தனர்.


Next Story