அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் 15 கிலோ மீட்பு என தகவல்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நேற்று 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் என்ற தனியார் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு அலுவலகத்தில் இருந்து நேற்று 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்ற நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை குற்றவாளிகள் என நிர்ணயித்து தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில், பாலாஜி என்ற நபரை போலீசார் இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சக்திவேல் என்பவரிடமும் போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் பாதி அளவாக சுமார் 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்படை போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் மீதமுள்ள சுமார் 17 கிலோ தங்கத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான முழு விவரம்:-
தனியார் வங்கி
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் பெடரல் என்ற தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள், தங்க நகைகளை அடகு வைத்து நகைக்கடன் பெற்றுள்ளனர்.
இந்த வங்கி அலுவலகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். நேற்று சனிக்கிழமை என்பதால் மதியம் 1 மணி வரை இயங்கியது. அதன்பிறகு வாடிக்கையாளர் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்கள் 3 பேர் மட்டும் கணக்குகளை சரிபார்த்து கொண்டிருந்தனர்.
வங்கி ஊழியர்
அந்த சமயத்தில பாதுகாப்பு பணியில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் வங்கி அலுவலக வாசலிலும், மற்றொருவர் உள்பகுதியிலும் இருந்துள்ளனர். இந்த நேரத்தில், அந்த வங்கி அலுவலகத்தில் மண்டல மேலாளராக ஏற்கனவே வேலை பார்த்த முருகன் என்பவர் அங்கு வந்துள்ளார். சென்னை பாடியைச் சேர்ந்த இவர், தற்போது அதே வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் பணிபுரிந்து வருகிறார்.
ஆனால், இவர் பெரிய கொள்ளை திட்டத்துடன் அங்கு வந்திருப்பது யாருக்கும் தெரியவில்லை. முதலில் வாசலில் இருந்த காவலாளி சரவணனிடம் முருகன் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, தனக்கு தெரிந்த 2 பேர் நகைக்கடன் வாங்க வர இருப்பதாகவும், தான் அவர்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மயக்க குளிர்பானம்
பின்னர் காவலாளி சரவணனிடம் தான் கொண்டுவந்த குளிர்பான பாட்டிலை கொடுத்து முருகன் குடிக்க சொல்லியுள்ளார். அவரும் தெரிந்தவர் தானே தருகிறார் என்ற நம்பிக்கையில் வாங்கி குடித்துள்ளார். சற்று நேரத்தில் சரவணனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் சுதாரித்துக்கொண்டு எனக்கு குளிர்பானத்தில் என்ன கலந்து கொடுத்தாய்? என்று கேட்டுள்ளார்.
உடனே முருகன் மறைத்து கொண்டுவந்த கத்தியை காட்டி மிரட்டி மறைவான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் சரவணன் மயக்கம் அடைந்து கீழே சரிந்துவிட்டார். இதனால் தான் கொண்டுவந்த கத்திக்கு வேலையில்லை என முருகன் மீண்டும் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு வங்கிக்குள் புகுந்துள்ளார்.
கத்தியை காட்டி மிரட்டல்
அங்கிருந்த மானேஜர் சுரேஷ், பெண் ஊழியர் விஜயலட்சுமி மற்றும் மற்றொரு ஊழியர் என 3 பேர் பணியில் இருந்தனர். அங்கு சென்ற முருகன் பழைய நட்புடன் 3 பேருடன் நலம் விசாரித்து அன்பாக பேசியுள்ளார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களும் வங்கிக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அதிரடி செயலில் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் 3 பேரையும் உள்ளே இருந்த காவலாளியையும் கத்தியை காட்டி மிரட்டி, அருகில் உள்ள அறைக்குள் இழுத்து சென்றுள்ளனர். அங்கே 4 பேரையும் ஒன்றாக கயிற்றால் கட்டி போட்டுவிட்டு அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறித்துவிட்டனர்.
நகைகள் கொள்ளை
முருகன் அங்கே ஏற்கனவே வேலை செய்தவர் என்பதால் நகைகள் இருக்கும் லாக்கரின் சாவி எங்கே இருக்கும் என்பதை நன்றாக தெரிந்துவைத்துள்ளார். அந்த இடத்துக்கு சென்று சாவியை எடுத்த அவர் தன்னுடன் இருந்த 2 பேரையும் அழைத்துக்கொண்டு நகைகள் இருக்கும் அறைக்கு சென்றார்.
அங்கே சாவியை கொண்டு லாக்கரை திறந்து உள்ளே இருந்த நகைகளை 3 பெரிய பைகளில் அள்ளியுள்ளனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, அதில் பதிவாகும் காட்சிகள் சேகரிக்கப்படும் 'ஹார்டு டிஸ்க்' ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.
வாடிக்கையாளர் வருகை
ஆனால் வெளியே சாலையில் சென்று கொண்டிருந்தவர்களுக்கு உள்ளே இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவில்லை. நகைகளை அள்ளிக்கொண்டு வெளியே வந்த 3 பேரும், சாதாரணமாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து அரை மணி நேரத்துக்கு பிறகு வாடிக்கையாளர் ஒருவர் வங்கியில் ஏதோ தகவல் கேட்பதற்காக அங்கு வந்துள்ளார். ஆனால் வங்கி அலுவலகத்தில் யாரும் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த நேரத்தில் அறையில் அடைபட்டு கட்டப்பட்ட நிலையில் கிடந்த 4 பேரும் உதவிகோரி சத்தம் போட்டது அந்த வாடிக்கையாளரின் காதில் விழுந்தது.
போலீசுக்கு தகவல்
உடனே அவர் ஓடிச்சென்று பார்த்துள்ளார். அவர்கள் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்ததுடன் உடனே அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் அறை கதவை உடைத்து 4 பேரையும் மீட்டனர்.
சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
கொள்ளை போன நகைகள் மதிப்பீடு
சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் அர்ஜூனா வரவழைக்கப்பட்டது. ஆனால், அந்த நாய் 200 மீட்டர் தூரத்துக்கு ஓடிச்சென்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
அதே நேரத்தில் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர். அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பை ஊழியர்கள் உதவியுடன் கணக்கிட்டனர்.
32 கிலோ நகைகள் கொள்ளை
மொத்தம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.15 கோடியே 75 லட்சம் ஆகும். நகைகள் கொள்ளைபோன சம்பவம் கேள்விப்பட்டவுடன், அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருந்தவர்களில் பலர் நேரடியாக வந்து குவிய தொடங்கினர். அதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சினிமா பாணியில் சம்பவம்
உடனே அங்கிருந்து அவர் வெளியே புறப்பட்டார். அப்போது, கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்புவை வாடிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு, தங்களின் நகை கொள்ளைபோனது குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களிடம், விரைவில் குற்றவாளிகளை பிடித்து, உங்களது நகைகள் மீட்டு வழங்கப்படும் என்று கூறிச்சென்றார்.
பட்டப்பகலில் நடந்த இந்த நகை கொள்ளை சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'ருத்ரா' என்ற திரைப்படத்தில் கோமாளி போல் வேடம் அணிந்து நடிகர் பாக்யராஜ் பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்து அனைத்து ஊழியர்களையும் ஒரே அறையில் அடைத்து போட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று விடுவார். அதே சினிமா காட்சி போன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.